(சுமார் பதினாறு வருடங்களுக்கு முன்பு நான் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த பொழுது நடந்த சம்பவம்)
சம்பவத்தின் பொழுது மதுரைக்கருகில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து சுற்றுலா அழைத்துச் செல்வதாக சர்குலர் ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்தது. அதை ஆசிரியர் வாசித்துக் காட்டி, ஒரு குறிப்பிட்ட தொகையை மறுநாள் பள்ளி வரும் பொழுது தவறாமல் கொண்டு வர வேண்டுமென்று கூறினார். அப்பொழுது நாங்கள் அனைவரும் அடைந்த மகிழ்ச்சியை கூறவும் வேண்டுமா!
அன்று சாயந்திரம் வீட்டிற்குச் சென்றதும்,பாட்டி செய்து வைத்திருந்த சுக்குக் களி மற்றும் முறுக்கைச் சுவைத்தவாறு , பள்ளியிலிருந்து சுற்றுலா அழைத்துச் செல்லும் விஷயத்தைப் பாட்டியிடம் கூறினேன்.( பாட்டியின் வளர்ப்பில் இருந்தேன் ). அவரும் பச்சைக் கொடி காட்டவே , மறுநாள் பள்ளி சென்றதும், முதல் வேலையாக வகுப்பாசிரியரிடம் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன்.
ஒரு நாள் சுற்றுலாவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில், வைகை அணை, அழகர் கோவில் , மஹால் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இருந்தனர்.
சுற்றுலாவிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்த பிறகு , பக்கத்து வீட்டிலுள்ள தோழிகள் அனைவரும் சேர்ந்து அளவளாவினோம்.முதல் நாள் இரவு தூக்கமே வரவில்லை. ஒரு வழியாக என்னையறியாமல் தூங்கி விட்டேன்.
சுற்றுலா செல்லும் நாளும் வந்தது. காலையில் எழுந்து, சிறிய பையுடன் தோழிகளுடன் பள்ளிக்குக் கிளம்பினேன். பள்ளியில் காலை வழிபாடு முடிந்தவுடன், தலைமை ஆசிரியர் ஒவ்வொருவர் பெயராக வாசிக்க, அவர்கள் சென்று வேனில் ஏறி அமர்ந்தனர்.
வேனில் ஏறியதும் , யார் ஜன்னலருகில் உள்ள இருக்கையில் அமர்வது என்பதில் போட்டி ஏற்பட்டது. ஒரு வழியாக அனைவரும் ஏறி அமர்ந்ததும் வேன் புறப்பட்டது. அனைத்து இடங்களைப் பார்த்தபின் இறுதியில்,பல்வேறு ஆரவாரங்களுக்கிடையில் வேன் அழகர் மலையை அடைந்தது.
என் வாழ்கையில் அவ்வளவு குரங்குகளைப் பார்ப்பது அது தான் முதல் முறை. அதற்கு முன், அவைகளைப் பற்றி பாட்டி சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவை என் கவனத்தைக் கவர்ந்தன. என் தோழி கையில் வைத்திருந்த வாழைப் பழத்தைக் குரங்கு ஒன்று பறித்துக் கொண்டு ஓடி விட்டது. அவள் "ஐயோ! அம்மா !" என்று அரற்றியவாறு இருந்தாள்.
எனக்கும் பயம் வந்து விடவே, குரங்கு என்னருகில் வரும் முன்னே கையில் வைத்திருந்த வாழைப் பழத்தைக் கீழே போட்டு விட்டேன். பின்பு, நாங்கள் அனைவரும் ஓடிப் பிடித்து விளையாடினோம். அங்கு விற்கும் வித, விதமான பொருட்களைப்(பாசி, வளையல், பொம்மை ) பார்வையிட்டோம். சிலர் சில பொருட்களை வாங்கினர்.
இறுதியில் நாங்கள் ஆளுக்கொரு "சோளக் கதிர்"(அவித்த மக்காசோளம் ) வாங்கிச் சுவைத்தவாறு பேசிக் கொண்டிருந்தோம். அனைவரும் தின்று முடித்து விட்டனர் என்னைத் தவிர. நான் பாதி மட்டுமே தின்று தீர்த்திருந்தேன்.
அப்பொழுது என்னருகில் ஒரு பிச்சைக் காரச் சிறுமி வந்து, "அக்கா! எனக்கும் கொஞ்சம் சோளக் கதிர் கொடுங்க!" என்று கெஞ்சினாள்.
அதற்கு நான் "ம்! போ! நா எச்சி வச்சிட்டேன் !தர மாட்டேன்!" என்று கூறினேன்.(ஒரு வேளை, அந்தச் சோளத்தின் சுவை என்னைக் கவர்ந்தது போலும்!) என் தோழியும் கொஞ்சம் கொடுக்குமாறு கூறினாள். ஆனால் , நான் தரவில்லை. இறுதியில் அங்கிருந்து புறப்படும் நேரம் வந்தது. அனைவரும் அவ்விடத்தை விட்டு அகலவே , நாங்களும் சென்று வேனில் ஏறி அமர்ந்தோம். "வேன் புறப்படும் வரை அந்தச் சிறுமி என்னைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள்."
அந்த நாள் எனக்கு எதுவுமே தோன்றவில்லை. ஆனால் , எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து , இன்று வரை சோளக் கதிரைப் பார்த்தாலே "அச்சிறுமியின் முகம் தான் என் நினைவுக்கு வருகிறது!".
பல நேரங்களில் குற்ற உணர்ச்சி என்னை வாட்டுகிறது.! அறியாப் பருவத்தில் நடந்தது தான்.! ஆனால்,"ஏனோ என் மனம் அதை ஏற்க மறுக்கிறது!!"