Tuesday, 3 May 2011

"கசப்பான அனுபவம்"

              இச்சம்பவம் நடந்த பொழுது  சென்னைக்கருகிலுள்ள  ஒரு பல்கலைக் கழகத்தில் கணினி முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று கொண்டிருந்தேன். அங்கு பரவலாக எல்லா மாநிலத்திலிருந்தும் மாணவர்கள் வந்து கல்வி கற்பார்கள். குறிப்பாக ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலிருந்து வந்து கற்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.


                   அச்சமயம் இரண்டாம் வருட இன்டெர்னல் தேர்வுகள் முடிந்திருந்தது. தோழிகள் அனைவரும் வார விடுமுறையைக் கழிக்க , பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து கொண்டிருந்தனர்.(மகாபலிபுரம், திருத்தணி ,சென்னை மற்றும் சில கோவில்களுக்கு). என் சொந்த ஊர் மதுரை என்பதால் நான் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஹோம் சிக் அதிகம் என்பதால் மாதம்  ஒன்றிரண்டு  முறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.எனவே நான் அவர்களுடன் செல்லாமல் , வீட்டிற்குச் செல்வதற்காக  என் சாமான்களைப் பேக் செய்து கொண்டிருந்தேன்.


                கல்லூரி விடுதியிலிருந்து பேருந்து நிலையம் ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. அங்கிருந்து  பேருந்து வசதி எதுவும் அவ்வளவாகக் கிடையாது. எப்பொழுதாவது "அத்தி பூத்தது போல" ஒரு மினி பஸ் பெரும் இரைச்சலுடன் வரும்.எனவே விடுதியில் உள்ள அனைவரும் ஆட்டோ வில் தான் பேருந்து நிலையம் செல்வது வழக்கம் . அன்று வழக்கமாகச் செல்லும் ஆடோக்காரருக்குப்   போன் செய்தால் , அவர் வேறு ஒரு சவாரியிலிருந்தார். எனவே விடுதிக் காப்பாளரிடம் வேறு ஒருவரின் மொபைல் எண்ணைப் பெற்று , அவரிடம் சரியாகப் பத்து நிமிடங்களில் விடுதி வாசலில் வந்து நிற்குமாறு கூறினேன்.


           அப்பொழுது அந்தி மாலை ஏறத்தாழ ஆறு மணி இருக்கும். தோழிகளிடம் விடை பெற்று , வாசலில் நின்ற ஆட்டோ வில் ஏறினேன்.போகும் வழி நெடுகிலும் முட்புதர்களும், கருவேல மரங்களும், ஆங்காங்கே சிறு, சிறு  குடிசைகளும், ஒரு துர்க்கை அம்மன் கோவிலும் உள்ளது.  அவற்றைப் பார்த்து ரசித்தவாறே சென்று கொண்டிருக்கும் பொழுது , நடு வழியில் ஆடோக்காரர் வண்டியை நிறுத்தினார். எனக்குப் "பகீர்" என்றது.  "அண்ணே! எதுக்கு வண்டியை நிறுத்தினீங்க ?" என்று கேட்டேன். அச்சமயம் இருள் கவ்வத் தொடங்கி இருந்ததால், என் இதயம் பட, படவென்று அடிக்கத் தொடங்கியது.


               "உண்மையச் சொல்லு ! இரண்டு நாள் முன்னாடி ராத்திரி நீ தான போன் பண்ண ?" என்று மிரட்டும் தொனியில்  கேட்டார்.

              "என்ன சொல்றீங்க? இன்னிக்கு சாயந்திரம் தான் எனக்கு உங்க நம்பரே தெரியும். அதுவும் வழக்கமா போறவர் வேற சவாரியிலிருந்ததால் , வார்டன் கிட்ட கேட்டு உங்க நம்பர வாங்கினேன்!" என்றேன்.


             உரையடல்களின்னூடே  அவரின் தோழர்களுக்குப் போன் செய்து "மச்சி! ஒடனே  கோயிலாண்ட வாங்கடா! போன் பண்ண பொண்ணு மாட்டிகிச்சி!" என்றவாறு போன் இணைப்பைத் துண்டித்தார்.

        "எனக்கு ஒன்றுமே புரியவில்லை!" கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நாலைந்து பேர் கையில் உருட்டுக் கட்டைகளுடன், பைக்கில் வந்து இறங்கி , ஆடோவைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த லுங்கியும், அழுக்குச் சட்டையும் வைத்துப் பார்த்த பொழுது, அவர்கள் அங்குள்ள சேரியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.


          எனக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும் , முகத்தில் வெளிக்காட்டாதவாறு, வார்த்தையைத் திடப்படுத்திக்கொண்டு , "யாரு நீங்க? எதுக்கு இப்படி வந்து சுத்தி நிக்கிறீங்க ? உங்களுக்கு என்ன வேணும் ?"  என்றேன்.

        "நீ யாரு? நீ  தானே ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்களுக்கு ராத்திரி போன் பண்ண ? சொல்லு !" என்றனர். அதற்கு நான் அருகிலுள்ள பல்கலை கழகத்தில் படிக்கும் விபரங்களையும் மற்றும் கல்லூரி ஐடி கார்டையும் எடுத்துக் காண்பித்ததோடு எனக்கும் , கால் செய்ததாக சொல்லப்படும் பெண்ணிற்கும் எந்தத் தொடர்புமில்லை" என்று கூறி என் உண்மை நிலையை விளக்கினேன்.
  

       கடவுள் அருளால் அவர்கள் என் நிலையைப் புரிந்து கொண்டு, "தங்களுக்கு இரு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஒரு மாணவர் கால் செய்து,பெண்கள் விடுதியில் ஒரு மாணவியைப் பாம்பு கடித்து விட்டதாகவும் , அதற்கு அவசரமாக ஆட்டோ தேவைப் படுவதாகவும்" கூறி உள்ளார். உடனே அந்த ஆட்டோ காரரும், அவரின் நண்பர்களையும் (உருட்டுக் கட்டைகளுடன் வந்தவர்கள் ) அழைத்து பதறியடித்துக்கொண்டு விடுதிக்குச் சென்றுள்ளனர். விடுதி வாட்ச் மேனிடம் கேட்டதற்கு , "அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை " என்றும் யாரோ தவறான தகவல் தந்துள்ளனர் என்று கூறி உள்ளார். அதிலிருந்து தொடர்ந்து அந்த மாதிரியான, அழைப்புகள்(பாம்பு கடித்தது, விஷம் குடித்தது, ஷாக் அடித்தது ) வந்து கொண்டிருப்பதாகவும் கூறி முடித்தார்.

       எனக்கு சில நிமிடங்களில் தலை சுற்றி விடும் போலிருந்தது. " இவ்வாறு கூட மாணவர்கள் செய்வார்களா?" என்று!


      பிறகென்ன சுற்றியிருப்பவர்கள் அகல , "கனத்த இதயத்துடன் பேருந்து நிலையம் சென்று சேர்ந்தேன்!"

3 comments:

  1. mam.....is diz ur true story....????

    ReplyDelete
  2. @vinoth.. yes.. while doing my mca i crossed over this marvelous experience..

    ReplyDelete
  3. good experience .....it's true ,,

    ReplyDelete