Sunday, 28 August 2011

"மறு பக்கம் !!"


                                                           

                   காலைப் பொழுது நன்றாக விடிந்து , ஆதவன் கதிர்கள் எங்கும் ஒளி வீசிக் கொண்டிருந்தது. பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன். வீட்டின் வெளிப்புற சுற்றுச் சுவரை சற்று மேலே உயர்த்திக் கட்டுவதற்கு செங்கல் ஆர்டர் செய்திருந்தோம்.சிறிது நேரத்தில், பக்கத்துக்கு ஊரிலுள்ள ஒரு செங்கல் சூளையிலிருந்து செங்கற்கள் ஏற்றிய லாரி வந்தால் , வேலை முடிந்தவுடன் அவர்களுக்குரிய பணத்தைக் கொடுத்து விடு!" என்று அப்பா போன் செய்து சொன்னார்.


                நானும் லாரி வரும் திசையை நோக்கி , "வழி மேல் விழி வைத்துக் " காத்திருந்தேன். சிறிது நேரத்தில் ஒரு பேரிரைச்சலுடன் ஓர் லாரி வந்து வீட்டின் முன்னால் நின்றது. அதிலிருந்து கீழே இறங்கியவர்களைப் பார்த்தவுடன் , நான் திகைத்து நின்றேன். . காரணம், அவர்கள் அனைவருமே சுமார் இருபது வயதிற்குட்பட்டவர்கள். மற்றும் அடிப்படைக் கல்வியறிவு கூட பெறாதவர்கள் என்பது அவர்களின் பேச்சிலிருந்து தெரிந்தது.

               மூன்று வாலிபர்கள் (சுமார்18 வயது) மற்றும் இரண்டு இளம் பெண்கள் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்து எனக்கு பரிதாபம் தான் வந்தது. இறைவா!! இவர்கள் , ஒருவேளை கல்வியறிவு பெற்றிருந்தால் இப்படிக் கூலித் தொழிலாளர்களாக இருந்திருக்க மாட்டார்கள். "வறுமையின் கோலம் " அவர்களின் தோற்றம் மற்றும் அவர்கள் அணிந்திருந்த அழுக்கு லுங்கியும், சட்டை இல்லாத மேனியும், மற்றும் பெண்கள் மேனியை மறைக்க அணிந்திருந்த நைந்த அழுக்குப் பாவாடையும்  , மேல் சட்டையும் அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது.! :(

             அப் பெண்களைப்  பார்த்ததும் என் மனம் வலித்தது.(உண்மையாக) பருவ வயதிலே , வாழ்க்கையின் ரசனையை அனுபவிக்க வேண்டிய சூழலிலே .. இப்படிக் கல் உடைத்து வயிற்றைக் கழுவுவது , அவர்கள் குற்றமா? இல்லை அவர்களை இந்த நிலைக்குத்  தள்ளியிருக்கும் கடவுளின் குற்றமா? அக்கணத்திலே , அவர்களுடன் ஒப்பிடும் பொழுது , நான் இறைவனால் பல மடங்கு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றே எனக்குத் தோன்றியது.!!


              என்னைப் பார்த்து அவர்கள், " அக்கா!! இந்தக் கல்ல எல்லாம் எங்கன வைக்க?" என்று கேட்டார்கள். செங்கற்களை , வீட்டின் முன் ஒரு இடத்தில் அடுக்குமாறு சொன்னேன். சொன்ன அடுத்த நிமிடத்தில் அனைவரும் மள மளவென கற்களை அடுக்கத் தொடங்கினர். அவர்களின் நேர்த்தியான வேகத்தைப் பார்த்தால் , அவர்கள் அனைவரும் பல வருடங்களாக அங்கு வேலை செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.!!

           எனக்கு சிறிது இரக்க சுபாவம் உண்டு. உடனே வீட்டின் உள்ளே சென்று , காபி போடலாம் என்றால் வீட்டில் பால் இல்லை. வெளியில் சென்று தண்ணி எதாவது வேண்டுமா ? என்று கேட்டேன். "ம்"| என்று பதில் வந்தது. உடனே ஒரு
பெரிய வாட்டர் பாட்டிலில் சுத்திகரிக்கப் பட்ட குடி நீரை கொண்டு சென்று கொடுத்தேன். அவர்களில் ஒருவனே அந்த ஒரு பாட்டில் தண்ணீரையும் குடித்து விட்டான். ஐயகோ!! எவ்வளவு களைத்திருக்கிறான்!! :(

         பிறகு அனைவருக்கும் தண்ணீர் கொடுத்தவுடன் , மறுபடியும் அனைவரும் வேலையில் சற்று மும்மரமாக இருந்தனர். அப்பெண்களைப்  பார்த்து, நான் சற்றே தயக்கத்துடன் , அக்கா! தப்பா நெனச்சுக்காதீங்க !! நான் ஒன்னு கேக்கலாமா? என்றேன்.

         சொல்லுங்கக்கா!! என்றனர் பதிலுக்கு. இல்ல என்கிட்ட சில துணிகள் இருக்கு. உங்களுக்கு தரலாமா? என்றேன். ம்,, குடுங்கக்கா !! என்று அவர்கள் வேலையைப் பார்த்தனர். உடனே வீட்டினுள் சென்று, சில சேலைகள் மற்றும் என்னுடைய உடைகள்  சிலவற்றை எடுத்து ஒரு பை நிறைய அடுக்கினேன்.

         வேலை முடிந்தது.. ! என்ற குரல் வந்தது. உடனே, அவர்களுக்குத் தர வேண்டிய பணம் மற்றும் போகும் வழியில் சாப்பிட சிறிது பழங்கள், ரொட்டிகள், உலர் திராட்சை மற்றும் முந்திரி பருப்புகள்(அவர்களால் சத்துள்ள பழங்களை சாப்பிட முடியாது!! :( > மற்றும் , துணிமணிகளையும் கொடுத்து அனுப்பினேன்.

         அவர்களில் ஒருவன் வண்டியைக் கிளப்ப, அனைவரும் வேலை முடிந்த களைப்பில்   ,  விடை பெற்றனர்...!! 

          அப்பெண்களின் முகத்தில் என்ன ஒரு குழந்தைத்தனம் ...!! அறியாமை இருளிலே மூழ்கி , காலமெல்லாம் செங்கல் சூளையிலே , நெருப்பின் கனலிலே சிக்கி உழல வேண்டுமோ?? அவர்களைப் போன்ற எத்தனை எத்தனை பெண்கள் , சிறுவர்கள் நாட்டிலே வறுமையின் பிடியில் சிக்கித் துன்புறுகின்றனர்  ... வாழ்வின் வசந்தக் காற்றை ஒரு முறையேனும் சுவாசிப்பரா? அவர்கள் அனைவரின் எதிர்காலமும்  கேள்விக் குறியோ ? போன்ற பல கேள்விகள் என்னுள் தோன்றி மறைந்தன ....!!!!

5 comments:

  1. இப்படி மறுபக்கத்தை பார்க்கக் கூடிய
    பண்பும் அன்பும் படித்த வசதி வாய்ப்புள்ளவர்கள்
    எத்தனை பேரிடம் உள்ளது?
    ஒரு சிறு நிகழ்வை மனத்தைத் தொடும் வகையில்
    மிக அழகாகச் சொல்லிப் போகும் உங்கள் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வேர்ட் வெரிஃபிகேசனை நீக்கினால்
    பின்னூட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. @Mr.Ramani.. Thank u sir for ur appreciation!! :)

    ReplyDelete